ஆன்மீக சபை (#11434)

*நீங்கள் கலந்தாலோசனை அறையில் நுழையும் பொழுதெல்லாம், இறைவனின் அன்பினால் துடிக்கும் உள்ளத்தோடும், அவரது நினைவைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் தூய்மைப்படுத்தப்பட்ட நாவோடும் இப்பிரார்த்தனையைக் கூறுங்கள்; அதனால் நீங்கள் மகத்தான வெற்றியை அடைவதற்கு, சர்வசக்தி வாய்ந்தவர் உங்களுக்கு அருள் கூர்ந்து உதவக்கூடும். 

கடவுளே, என் கடவுளே! மகத்துவம் பொருந்திய இந் நாளில் உம்மைத் தவிர வேறு பற்றுகளை எல்லாம் துறந்து பக்தியுடன் உமது திருமுகம் நோக்கி நிற்கும் நாங்கள் உமது ஊழியர்களாவோம். எங்கள் கருத்திலும் சிந்தனையிலும் ஒன்றுபட்டு உமது திருமொழியினை மனித இனத்தின் மத்தியில் உயர்வுறச் செய்ய வேண்டும் என்ற நோக்க ஒற்றுமையுடன் நாங்கள் இவ்வான்மீகச் சபையில் கூடியிருக்கின்றோம். பிரபுவே, எங்கள் இறைவா! எங்களை உமது தெய்வீக வழிகாட்டுதலின் அடையாளங்களாகவும், மனிதர்களிடையே உமது உயரிய சமயத்தின் விருதுக்கொடிகளாகவும், உமது வலிமைமிகு ஒப்பந்தத்தின் ஊழியர்களாகவும்—எங்களின் அதி மேன்மையான பிரபுவானவரே—உமது அப்ஹா இராஜ்யத்தினில் உமது தெய்வீக ஒற்றுமையின் வெளிப்படுத்துதலாகவும், எல்லாப் பகுதிகளிலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் விண்மீன்களாகவும் ஆக்குவீராக. பிரபுவே! உமது வியத்தகு அருள் அலைகள் நிறைந்த கடலாகவும், உமது ஒளிமயமான உச்சத்திலிருந்து வழிந்தோடும் நீரோடைகளாகவும், உமது விண்ணுலகச் சமயமெனும் விருட்சத்தின் மீதுள்ள இனிய கனிகளாகவும், உமது வள்ளன்மை என்னும் தென்றல் காற்றினில் அசைந்தாடிடும் திராட்சைத் தோட்டத்தின் மரங்களாகவும் ஆகிட எங்களுக்கு உதவி புரிவீராக. கடவுளே! உமது அருட்பொழிவினால் எங்களின் உள்ளங்களைக் களிப்புறச் செய்து, எங்களின் ஆன்மாவை உமது தெய்வீக ஒற்றுமையென்னும் வாசகங்களைச் சார்ந்திருக்கச் செய்வீராக; அதனால் நாங்கள் ஒரே கடலின் அலைகள் போல் ஒன்றிணைந்து, உமது பிரகாசமிக்கத் தீபத்தின் ஒளிக்கதிர்கள் போல் ஒன்றிணைந்திடுவோமாக; அதனால் எங்கள் சிந்தனைகள், கருத்துகள், உணர்ச்சிகள் ஆகிய யாவும் ஒரே மெய்ப்பொருளாகி, உலக முழுவதிலும் ஒற்றுமையுணர்வை வெளிப்படுத்திடுமாக. நீரே அருள்மிகுந்தவர், வள்ளன்மை மிக்கவர், வழங்குபவர், எல்லாம் வல்லவர், கருணைமிக்கவர், இரங்குபவர். 

— அப்துல்-பஹா

-`Abdu'l-Bahá
-----------------------

ஆன்மீக சபை (#11435)

*கலப்பற்ற மகிழ்வுடன் ஒன்றுகூடுங்கள்; பின்னர் கூட்டத்தின் ஆரம்பத்தில், தூய்மையுடன் இப்பிரார்த்தனையைக் கூறுங்கள். 

இராஜ்யத்தின் அதிபதியே! எங்களின் உடல்கள் இங்கு ஒன்றுகூடியிருந்த போதும், மெய்மறந்த எங்கள் இதயங்கள் உமது அன்பினால் கிளர்ச்சியுற்று, நாங்கள், உமது பிரகாசமிகு வதனத்தின் ஒளிக்கதிர்களினால் பரவசமடைந்துள்ளோம். நாங்கள் பலவீனர்களாயினும் உமது வல்லமை, சக்தி ஆகியவற்றின் வெளிப்பாடுகளுக்காகக் காத்திருகின்றோம். நாங்கள் பொருள்களோ, வழிவகைகளோ அற்ற வறியவர்களாயினும், உமது இராஜ்யத்தின் பொக்கிஷங்களிலிருந்து செல்வங்களை எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் துளிகளேயாயினும், உமது சமுத்திரத்தின் ஆழங்களிலிருந்து நீரை எடுத்துக் கொள்கிறோம். தூசுகளேயாயினும், நாங்கள் உமது சுடரொளி வீசிடும் கதிரவனின் மகிமையில் பிரகாசிக்கின்றோம். 

எங்களின் போஷகரே! உமது உதவியினை அனுப்பிடுவீராக, அதன்வழி இங்குக் கூடியிருக்கும் ஒவ்வொருவரும் ஓர் எரியும் மெழுகுவத்தியாகவும், ஈர்ப்பின் மையமாகவும், உமது தெய்வீக இராஜ்யங்களின்பால் அழைப்பவர்களுமாக ஆகி, இறுதியில் இக்கீழுலகினை உமது சுவர்க்கத்தின் பிரதிபலிப்பாக ஆக்கிடக் கூடும்.

-`Abdu'l-Bahá
-----------------------

ஆன்மீக சபை (#11436)

*ஆன்மீகச் சபைக் கூட்டத்தின் முடிவில் கூறவேண்டிய பிரார்த்தனை

கடவுளே, கடவுளே! உம்மிலும் உமது அடையாளங்களிலும் நம்பிக்கை வைத்து, உமது ஒப்பந்தத்திலும் இறுதி சாஸனத்திலும் உறுதியடைந்து, உந்தன்பால் கவரப்பட்டு, உமது அன்பெனும் நெருப்பினால் பிரகாசமடைந்து, உமது சமயத்தில் உண்மையுள்ளவர்களாகவும் இவ்வான்மீகச் சபையில் கூடியிருக்கும் எங்களை, நீர், கண்களுக்குப் புலனாகாத உமது ஒருமைத் தன்மை என்னும் இராஜ்யத்திலிருந்து பார்க்கின்றீர். நாங்கள் உமது திராட்சைத் தோட்டத்தின் ஊழியர்கள், உமது சமயத்தைப் பரப்புபவர்கள், உமது திருமுகத்தைப் பக்தியுடன் வணங்குபவர்கள், உமது அன்பர்கள்முன் பணிவானவர்கள், உமது வாயிலின் முன் தாழ்மையானவர்கள். உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சேவையில் உறுதிப்படுத்துமாறும், பார்க்கவியலா உமது படைகளைக் கொண்டு எங்களுக்கு ஆதரவளிக்குமாறும், உமது சேவையில் எங்களின் இடைகளை வலுப்பெறச் செய்யுமாறும் மன்றாடுகின்றோம்; அதனால் நாங்கள் உமக்குக் கீழ்ப்படிந்து, பூஜித்து, உம்முடன் உரையாடும் குடிகளாக ஆகக்கூடும். 

எங்கள் பிரபுவே! நாங்கள் வலுவற்றவர்கள்; நீரே வல்லவர், சக்தி மிக்கவர். நாங்கள் உயிரற்றவர்கள், நீர் உயிரளிக்கும் பரமாத்மா. நாங்கள் வறியவர்கள், நீரே பராமரிப்பவர், சக்தி வாய்ந்தவர். 

எங்கள் பிரபுவே! எங்கள் முகங்களை உமது கருணைமிகு வதனத்தின்பால் திரும்பச் செய்வீராக; உமது தெய்வீகப் பீடத்திலிருந்து உமது அபரிமிதமான அருளைக் கொண்டு உணவூட்டுவீராக; உமது அதிமேலான தெய்வ கணங்களைக் கொண்டு எங்களுக்கு உதவி புரிந்து அப்ஹா இராஜ்யத்திலுள்ள உமது தூய ஆன்மாக்கள் மூலமாக எங்களை உறுதிப்படுத்துவீராக. 

மெய்யாகவே, நீரே தாராள குணமுடையவர், கருணை மிக்கவர். நீரே பெரும் வள்ளன்மையுடையவர், மெய்யாகவே, நீரே இரங்குபவர், அருள் மிகுந்தவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

